தூங்கும் சிறுத்தைப்புலியை சீண்டாதீர்... ட்ரம்பிற்கு ஜனாதிபதி ஒருவர் கடும் எச்சரிக்கை
தூங்கும் சிறுத்தைப்புலியை எழுப்பி சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்வதாக கொலம்பிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
போரை அறிவிப்பதற்கு
அமெரிக்காவில் சந்தைப்படுத்தும் நோக்கில் போதைப்பொருட்களை தயாரிப்பதாக அவர் நம்பும் எந்த நாடும் இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே கொலம்பிய ஜனாதிபதியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வெனிசுலாவிற்குள் இராணுவத் தாக்குதல்கள் மிக விரைவில் தொடங்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்துடன், போதைப்பொருளை உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் சாத்தியமான இலக்காக இருக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கொலம்பியாவை குறிவைத்து ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு உடனடியாக பதிலளித்துள்ளார் ஜனாதிபதி குஸ்டாவோ பெத்ரோ. எங்கள் இறையாண்மையை அச்சுறுத்துவது போரை அறிவிப்பதற்கு ஒப்பாகும்; இரண்டு நூற்றாண்டு கால தூதரக உறவுகளை சேதப்படுத்தாதீர்கள் என்றும் பெத்ரோ தமது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வகங்களை அழிக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளைப் பார்க்க கொலம்பியாவிற்கு வருகை தருமாறும் ட்ரம்பை பெத்ரோ அழைத்தார்.

ஒவ்வொரு 40 நிமிடத்திற்கு ஒரு சட்டவிரோத ஆய்வகம் என கொலம்பியா அரசாங்கம் அழித்துள்ளதை வந்து பாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கோகோயின் உற்பத்தி செய்யும் நாடாகும் கொலம்பியா. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ட்ரம்ப் நிர்வாகம், 1989 பனாமா படையெடுப்பிற்குப் பிறகு காணப்படாத அளவிற்கு லத்தீன் அமெரிக்காவில் பதட்டங்களை அதிகரித்து வருகிறது.
கோகோயின் உற்பத்தி
கரீபியன் கடற்பகுதியில் வெனிசுலாவின் வாசலில் பென்டகன் கிட்டத்தட்ட 15,000 வீரர்களைக் கொண்ட ஒரு கணிசமான கடற்படைப் படையை நிறுத்தியுள்ளது.

மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்துவதாக கூறப்படும் சிறிய படகுகள் மீதான தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், போதைப்பொருள் மீதான நடவடிக்கை வெனிசுலாவுடன் முடிந்துவிடுமா என்ற கேள்விக்கு,
கொலம்பியா கோகோயின் தயாரிக்கிறது. அவர்களிடம் கோகோயின் உற்பத்தி ஆலைகள் உள்ளன. அவர்கள் அமெரிக்காவில் அதை விற்பனை செய்கிறார்கள். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என குறிப்பிட்டு,

எவரேனும் அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனையை முன்னெடுப்பதாக தெரிய வந்தால், தாக்குதலுக்கு உள்ளாவது உறுதி என்றார்.
போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் நீண்டகால கூட்டாளிகளாக இருந்த அமெரிக்காவும் கொலம்பியாவும், ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற தருணத்திலிருந்தே தங்கள் உறவில் விரிசல் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |