வணிக வளாகத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட பலரை படுகொலை செய்த நபரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியானது
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து பொலிஸ் அதிகாரி உட்பட10 பேரைக் கொன்ற நபரின் பெயர் அகமது அல் இசா என்று விசாரணை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதேயான அல் இசா மீது தற்போது 10 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்து அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.
இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடிய நிலையில், பலர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் அந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்து அந்த இளைஞரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி எரீக்டேலி என்பவர் மரணமடைந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொலிசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தார்கள். அப்போது அந்த நபர் ரத்த காயத்துடன் காணப்பட்டார்.
வணிக வளாகத்தில் அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் தலைமை அதிகாரி மாரிஸ் ஹெரால்டு தெரிவிக்கையில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் எங்களது ஒரு அதிகாரி உள்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரியை காலில் சூட்டு காயத்துடன் பிடித்துள்ளோம் என்றார். குறித்த துப்பாக்கிச்சுடு சம்பவத்திற்கு பின்னணியில் எந்த நோக்கமும் இல்லை என்றே முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
