கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட பிரித்தானியர்... 15 மாதங்கள் மட்டுமே என கெடு விதித்த மருத்துவர்கள்
பிரித்தானியாவின் கென்ட் பகுதியை சேர்ந்த நபர், கடந்த சில மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட, பணிச்சுமை காரணம் என கருதியிருந்த நிலையில், தற்போது அது முற்றிய புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடுமையான தலைவலி
கென்ட் பகுதியை சேர்ந்த 39 வயது ரிக்கி ஸ்மித் என்பவரே கடந்த சில மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பிப்ரவரியில் இருந்தே அவருக்கு தலைவலி இருந்துள்ளது.
பணிச்சுமையின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பிய ரிக்கி, மருத்துவ உதவியையும் நாடவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் தலைவலியில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அறிந்த அவரது மனைவி 41 வயது Katrina Binfield மருத்துவர் ஒருவரை சந்திக்க கணவரை கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் முதல்முறை சந்தித்த மருத்துவர் ரிக்கியை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதுடன், அதிகமாக தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், ரிக்கியால் தலைவலியில் இருந்து மீள முடியவில்லை.
இந்த நிலையில், கண் மருத்துவர் ஒருவரை சந்திக்க ரிக்கியை அனுப்பி வைத்துள்ளார் கத்ரீனா பின்ஃபீல்ட். கண் மருத்துவரே கவலை அளிக்கும் அறிகுறிகளை கண்டறிந்துள்ளார்.
அதிகபட்சமாக 15 மாதங்கள்
அவரது கண்களுக்கு பின்னால் ரத்தம் கசிந்திருப்பதாக அவர் உறுதி செய்துள்ளார். இந்த அறிகுறையை தீவிரமாக பரிசோதித்ததில், ரிக்கி முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்கள் MRI ஸ்கேன் முன்னெடுத்து, ரிக்கியின் நிலையை உறுதி செய்துள்ளனர். மிக மோசமான மூளை புற்றுநோயால் ரிக்கி பாதிக்கப்பட்டுள்ளதையும், இனி அதிகபட்சமாக 15 மாதங்கள் மட்டுமே அவர் உயிர் வாழ வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் தனது பொன்னான நேரத்தை செலவிட ஏதேனும் சிகிச்சை உள்ளதா என்றும் ரிக்கி தற்போது எதிர்பார்க்கிறார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான ரிக்கி ஓய்வறியாமல் வேலை பார்ப்பவர் என்றும், ஆனால் தற்போது ஒரு நோயாளியாக வீட்டில் முடங்கியிருப்பது தாங்க முடியாத வலியாக உள்ளது என்றும் பின்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.