CSK அணியின் விளம்பரதாரர்... ரூ 40,000 கோடி சொத்துக்களை உதறிவிட்டு புத்த பிக்குவான தமிழர்
பெரும் கோடீஸ்வரரும் மலேசியத் தமிழருமான ஆனந்த கிருஷ்ணனின் மூன்று பிள்ளைகளில் ஒருவர் தான் சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறிவிட்டு புத்த பிக்குவாக மாறியவர்.
பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்
மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் பரவலாக AK என்றே அழைக்கப்படுகிறார். டெலிகாம் துறையில் கோலோச்சும் அவரது மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 40,000 கோடிக்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது.
டெலிகாம் துறை மட்டுமின்றி, ஊடகம், எண்ணெய், எரிவாயு, கட்டுமானம் மற்றும் செயற்கைக்கோள் என அவர் கால் பதிக்காத துறை குறைவு. சென்னை ஐ.பி.எல் அணிக்கும் இவரது நிறுவனம் விளம்பரதாரராக இருந்துள்ளது.
மலேசியாவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன் தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பதிலும் முன்னணியில் இருப்பவர். கல்வி மற்றும் மனிதாபிமான செயல்களுக்காக பெருந்தொகை நன்கொடை அளித்தும் வருகிறார்.
புத்த மதத்தை பின்பற்றும் ஆனந்த கிருஷ்ணனின் மகனான Ven Ajahn Siripanyo என்பவரே சொத்து சுகங்களை மொத்தமாக உதறிவிட்டு பிக்குவாக மாறியவர்.
தமது 18 வயதில் துறவறம் என்பதை வேடிக்கையாகவும், தற்காலிக பரிசோதனையாகவும் முன்னெடுத்த Ven Ajahn Siripanyo, இறுதியில் அதையே தமது வாழ்க்கையாகவும் மாற்றிக்கொண்டுள்ளார்.
8 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், தமது சகோதரிகள் இருவருடனும் பிரித்தானியாவில் வாழ்ந்தவர் Ven Ajahn Siripanyo. தாம் துறவியானதன் உண்மையான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
தாய்லாந்து அரச குடும்பத்திற்கும்
பல கோடி சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தும் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறவு வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது அவர் தாய்லாந்தை சேர்ந்த Dtao Dum மடத்தின் மேற்பார்வையாளராக உள்ளார். மேலும், தாய்லாந்து அரச குடும்பத்திற்கும் Ven Ajahn Siripanyo-வுக்கும் தாய்வழி தொடர்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
துறவறத்தில் வாழ்ந்து வரும் போதும், தனது தந்தையை சந்திக்கும் பொருட்டு அவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும், Penang மலைப்பகுதியில் ஆன்மீக ஓய்வுக்கு என அடிக்கடி Siripanyo செல்வதை அறிந்த ஆனந்த கிருஷ்ணன், மகனுக்காக அப்பகுதியை விலைக்கு வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.