சசிகலா நாளை காலை விடுதலையாவது உறுதி
ஜனவரி 27ம் தேதி காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா நாளை விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார்.
இந்நிலையில் விடுதலையாக ஒருவாரம் இருந்த நிலையில் அவருக்கு கடும் காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
இதனையடுத்து பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு கொரோனா இருப்பதும் உறுதியானதுடன், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்தனர்.
தற்போது வெளியான அறிக்கையின்படி, சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. அவர் சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். அவரது இதய துடிப்பு நிமிடத்திற்கு 74, ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவில் உள்ளது.
சுவாசம் நிமிடத்திற்கு 19 என்ற அளவில் இருக்கிறது. அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் 98 என்ற அளவில் உள்ளது. அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு காவல்துறையினர் ஆவணங்களில் கையொப்பம் வாங்குகின்றனர், தொடர்ந்து 10.30 மணிக்கு விடுதலையாகிறார்.