தவெக உடன் கூட்டணியா? திட்டவட்டமாக அறிவித்த காங்கிரஸ்
தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் விளக்கமளித்துள்ளார்.
தவெக கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், புதிய கட்சியான விஜய்யின் தவெக என தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வந்த பின் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்த பின்னரும் எந்த கட்சிகளும் தவெக தலைமையை ஏற்று கூட்டணியில் இணையவில்லை.
தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் நிர்வாகிகள்
சமீபத்தில், ராகுல் காந்தியின் அரசியல் வியூக வகுப்பாளாரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதனால், காங்கிரஸ் மற்றும் தவெக இடையே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இதே போல், காங்கிரஸ் முன்னாள் செயல்தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தவெக உடன் கூட்டணி சேர்வதே ஒரே வழி என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், தவெக உடன் கூட்டணியில் இணைய வேண்டுமென வலியுறுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சூர்ய பிரகாசம், திமுக வின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸை மாற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, "ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு
இவ்வாறாக கூட்டணி தொடர்பான அழுத்தங்கள் உட்கட்சியில் அதிகரித்து வரும் நிலையில், கூட்டணி நிலைப்பாட்டை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவாத்தை முன் கூட்டியே தொடங்கப்பட்டு சுமூகமாக நடைபெற்று வருகிறது. திமுகவுடன் கூட்டணி இல்லை என நாங்கள் எப்போது சொன்னோம்?
ஒரு மாதத்திற்கு முன்பாகதான் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை வாங்கியுள்ளோம்.
தவெகவுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி. கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எழுப்பிய புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ்குமார், செந்தில்குமார் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்னைகளை நிர்வாகிகள் பொதுத் தளத்தில் பகிர வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |