தவெக கூட்டணிக்கு முயற்சிக்கும் காங்கிரஸ்? விஜய்யை சந்தித்து பேசிய முக்கிய நிர்வாகி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாளுக்கு பரபரத்து வருகிறது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக என 4 முனை போட்டி நிலவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் சில காலம் முடங்கி இருந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், செங்கோட்டையனின் இணைவு, புதுச்சேரியில் பிரச்சார திட்டம் என மீண்டும் தீவிர அரசியலுக்கு தயாராகி வருகிறது.
பிரவீன் சக்கரவர்த்தி விஜய் சந்திப்பு
இந்நிலையில், ராகுல் காந்தியின் அரசியல் வியூக வகுப்பாளாரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பில் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாகவும், இப்போது எதுவும் கூற இயலாது எனவும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில், விஜய்யை பாராட்டுவது போல் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு ஒன்றும் வெளியிட்டிருந்தார்.
பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸின் நிபுணர்கள் & தரவு பகுப்பாய்வு குழுவின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக ஐபிஎம், மைக்ரோசாப்ட், பிஎன்பி பரிபாஸ் ஆகிய பெரு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி முயற்சித்தார்.
முன்னதாக ராகுல் காந்தி விஜய்யுடன் பேசியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு தவெக கூட்டணிக்கும் காங்கிரஸ் முயற்சிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீபத்தில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு, முதல்வர் முகஸ்டாலினை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |