பட்டப்பகலில் அமெரிக்க பெண் எம்.பி.யிடம் துப்பாக்கி முனையில் கார் பறிப்பு
அமெரிக்காவின் ஃபிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண் எம்.பி-யிடம் இருந்து துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் காரை கடத்தி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மேரி கே ஸ்கேன்லென் என்பவரிடம் இருந்தே கார் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி பகல் 2.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் மேரி கே ஸ்கேன்லென்னுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அம்மாநகர மேயர் ஜிம் கென்னி கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெற்கு ஃபிலடெல்பியாவில் உள்ள எஃப்.டி.ஆர். பூங்காவில் தனது 2017 அக்யூரா எம்.டி.எக்ஸ். காரை நோக்கி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார் மேரி.
அப்போது பின்னால் இருந்து வந்த எஸ்.யு.வி. வகை கார் ஒன்றில் இருந்த இரண்டு ஆண் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி அவரது கார் சாவியைப் பறித்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கொள்ளையர்களை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது, பல அமெரிக்க மாநகரங்களைப் போலவே ஃபிலடெல்பியாவில் கடந்த ஓராண்டாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.