TNPSC தேர்வில் இயேசு குறித்த கேள்வியால் தொடரும் சர்ச்சை! இந்து அமைப்பு கண்டனம்
TNPSC Group 4 தேர்வில் கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
அந்தவகையில், டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 30 ம் திகதி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிப்பை தேர்வாணையம் அறிவித்தது.
6244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், கடந்த 9 -ம் திகதி நடந்த எழுத்துத்தேர்வில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்வி
தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக பல்வேறு இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.
அதாவது, கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, 1.அருளப்பன் 2. யோவான் 3. சந்தாசாகிப் 4. சந்நியாசி 5. விடை தெரியவில்லை என்ற 5 ஆப்ஷன்கள் பதில் அளிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கேள்வியானது முதல் பக்கத்திலேயே கேட்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்று கேட்டு அதில் இயேசு, மரியாள், மற்றும் யூதாஸ் பெயர்கள் பதிலுக்கான ஆப்ஷனாக கொடுக்கப்பட்டு உள்ளது.
கிறிஸ்தவ மதம் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இந்து முன்னணி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |