வேகமாக சென்ற காரை துப்பாக்கியுடன் துரத்திய பொலிசார்... துப்பாக்கியை வைத்துவிட்டு பெண் சாரதியை ஆறுதலாக கட்டியணைத்த நெகிழ்ச்சி தருணம்
அமெரிக்காவில், வேகமாக சென்ற கார் ஒன்றை பொலிஸ் வாகனங்கள் பல துரத்த, பார்க்கிங் ஒன்றை அடைந்த அந்த காரை பொலிசார் துப்பாக்கியுடன் சூழ்ந்துகொண்டனர்.
பொலிசார் ஒருவர் துப்பாக்கியை நீட்டியபடி அந்த காரின் சாரதியை கதவைத் திறக்க உத்தரவிடுகிறார். காரின் கதவு திறந்ததும் நடந்த நிகழ்வு, யாரும் சற்றும் எதிர்பாராதது.
அந்த பொலிசார் மற்ற பொலிசாரைப் பார்த்து ஆபத்து இல்லை என்பதுபோல் சைகை காட்டிவிட்டு, சட்டென தனது துப்பாக்கியை அதன் உறையில் வைத்துவிட்டு அந்த காரின் சாரதியான பெண்ணை ஆறுதலாகக் கட்டியணைக்கிறார்.
அதைக்கண்ட மற்றொரு பொலிசாரும் தன் கையில் இருந்த துப்பாக்கியை கார் மீது வைத்துவிடுகிறார்.
இந்த காட்சிகள் பொலிசார் உடலில் பொருத்தியிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன. நடந்தது என்னவென்றால், Latrece Curry (41) என்ற அந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் நடந்த குடும்ப சண்டையின்போது அவர் கணவனால் தாக்கப்பட்டிருப்பார் போலும்.
Latrece கணவனிடமிருந்து காரில் தப்பியோடும்போதுதான் பொலிசார் அவரை துரத்தியிருக்கிறார்கள்.
யாரோ ஒரு குற்றவாளி காரை வேகமாக செலுத்துவதாக எண்ணி காரை துரத்தி மடக்கிய பொலிசார், காரை துப்பாக்கியுடன் நெருங்க, தலைமைக் காவலரான James Richardson துப்பாக்கியை நீட்டியவாறு கார் கதவைத் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
காரின் கதவு திறந்தால், அங்கே ஒரு பெண் பயங்கரமாக பயந்து நடுங்கியபடி அமர்ந்திருக்கிறார். அந்த பெண் மிகவும் பயந்திருந்தார், காற்றில் இலைச்சருகு நடுங்குவது போல் அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது என்கிறார் James.
கண்களில் மரண பயம் தெரிய, நடுநடுங்கிக்கொண்டிருந்த Latreceஐக் கண்ட James, துப்பாக்கியை அதன் உறையில் வைத்துவிட்டு, மற்றவர்களுக்கும் ஆபத்தில்லை என சமிக்ஞை கொடுத்துவிட்டு, ஒன்றுமில்லை, பயப்படாதிருங்கள் என Latreceஐ ஆறுதல் படுத்தியிருக்கிறார்.
தனது சீட் பெல்ட்டைக்கூட கழற்றாமல் நடுங்கிக்கொண்டிந்த Latreceஇன் சீட் பெல்ட்டை கழற்றுவதற்காக James குனிய, அந்த பெண்ணோ அவர் தன்னை ஆறுதல் செய்ய முயல்வதாக எண்ணினாரோ என்னவோ, Jamesஐ கட்டியணைத்துக்கொண்டு கதறியிருக்கிறார்.
எங்கள் கைகளில் துப்பாக்கி இருந்தது, அவரைப் பார்த்து நாங்கள் துப்பாக்கியையும் நீட்டினோம், ஆனால், அவரால் ஆபத்து இல்லை என்பது தெரிந்ததும் நான் அவரது சீட் பெல்ட்டை கற்ற முயன்றேன்.
அந்த பெண் என்னை சட்டென அணைத்துக்கொண்டு கதறியழுதார், எனது 23 வருட பணி அனுபவத்தில் இப்படி நடந்ததில்லை.
நானும் அந்த பெண்ணை ஆறுதலாக அணைத்துக்கொண்டேன் என்று கூறும் James, இரக்கம் என்பது முக்கியமான ஒரு விடயம், பொலிசாருக்கும் கூட, குற்றவாளியைத் துரத்திப் பிடிக்கும் இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலும் கூட, உங்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை அந்த சம்பவம் எனக்கு கற்றுத்தந்தது என்கிறார்.
இதற்கு முன் Latrece மீது எந்த குற்றவியல் வழக்கோ குற்றச்சாட்டோ இல்லை. ஆகவே கைது செய்யப்பட்டாலும் அவர் மீது பொலிசாரிடமிருந்து தப்பியோடுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்டம் தன் கடமையையும் செய்துள்ள அதே நேரத்தில், பொலிசார் இரக்கத்தையும் காட்டியுள்ள இந்த சம்பவம், மனதை நெகிழ்ச்சியடையச் செய்வதாக உள்ளது.


