4 லட்சம் தொட்ட பலி எண்ணிக்கை: அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை நான்கு லட்சத்தை எட்டியுள்ளது.
கொரோனாவால பலியானவர்களுக்காக தலைநகர் வாஷிங்டனில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி கூட்டத்தில், ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பங்கேற்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், முந்தைய டிரம்ப் நிர்வாகம் மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சம் கடந்த நிலையில், இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போரில் மரணமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கைக்கு இணையானது எனவும், புளோரிடா, நியூ ஆர்லீன்ஸ், ஒக்லஹாமா மாகாணங்களின் மக்கள் தொகைக்கு இணையானது எனவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், வரும் மே மாதத்திற்குள் பலி எண்ணிக்கை 5.50 லட்சத்தை தொடும் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின்ன்னர் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட நான்கு மாத காலம் ஆனது. பின்ன்னர், மூன்று லட்சம் வரை உயர்ந்த பலி எண்ணிக்கை, ஒரு மாத காலத்தில் நான்கு லட்சமாக உயர்ந்துள்ளது, அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள ஆப்ரகாம் லிங்கன் நினைவிடத்தில், கொரோனா தொற்றுக்கு பலியானோருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், நேற்று நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், நம் மனதில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆற, நம் இழப்பை நினைவு கூர வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நினைவு கூர்வது வேதனையடைய செய்யலாம். ஆனால், காயம் ஆற அதுவே சிறந்த வழி என்றார். பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் செயல்படாவிட்டால், மேலதிக இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அஞ்சலி நிகழ்வின் ஒருபகுதியாக லிங்கன் நினைவிடத்தில் உள்ள மிகப் பெரிய குளத்தை சுற்றி, 400 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும், உயிரிழந்தோருக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.