24 மணி நேரத்தில் புதிதாக அரை மில்லியன் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு கொரோனா தொற்று
பிரான்சில் கொரோனா தொற்று பயங்கரமாக பரவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 501,635 ஆகும்.
பிரான்சில், கடந்த ஒரு வாரத்தில், சராசரியாக நாளொன்றிற்கு 360,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
கொரோனா தொற்று எண்ணிக்கையில், இது ஐரோப்பாவிலேயே அதிக எண்ணிக்கை ஆகும்.
பிரான்சில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனாலும், அவர்களில் 3,700 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ளார்கள். அதாவது, முந்தைய கொரோனா அலைகளை விட இந்த எண்ணிக்கை குறைவு!
சமீபத்தைய கொரோனா அலைக்கு, Omicron வகை கொரோனா வைரஸ்தான் காரணமாக அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 364 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129,489ஆக உயர்ந்துள்ளது.
பிரான்சைப் பொருத்தவரையில், நாடு இந்த கொரோனா அலையிலிருந்து எவ்வாறு விடுபடுகிறது என்பது, ஏப்ரலில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.