ஐந்தாவது அலை... முக்கிய முடிவெடுக்கும் சுவிஸ் பெடரல் கவுன்சில்
கொரோனா புதிய மாறுபாடு உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஐந்தாவது அலையை எதிர்கொள்ளும் சுவிஸ் நிர்வாகம் கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. பள்ளிகள், முதியோர் காப்பகங்கள், எல்லையில் வசிக்கும் மக்களில் வேகமாக தொற்று பரவுதல் என நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், தீவிர சிகிச்சைப் பிரிவை நாடுவோரின் எண்ணிக்கையும் குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளது.
ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் லேசான அறிகுறிகளே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் பெடரல் கவுன்சில் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் பொதுவெளியில் 300 பேர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். மட்டுமின்றி, இனி மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எங்கெல்லாம் தடுப்பூசி சான்றிதழ் கோரப்படுகிறதோ அங்கெல்லாம் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் பெடரல் கவுன்சில் நீக்கியுள்ளது.
பள்ளிகளில் கொரோனா சோதனை கட்டாயம் என்பதை ரத்து செய்துள்ளதுடன், மாநிலங்களின் எதிர்ப்பையும் கருத்தில் கொண்டுள்ளது.