சுவிட்சர்லாந்தில் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்
சுவிட்சர்லாந்தில் நேற்று நள்ளிரவுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன.
ஆகவே, இனி பொது இடங்களுக்குள் நுழைய சுகாதார பாஸ்கள் தேவையில்லை.
பணித்தலம், கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது இப்போதைக்கு மாஸ்க் அணியவேண்டும். என்றாலும், அந்தக் கட்டுப்பாடும் அடுத்த மாத இறுதியில் முடிவுக்கு வர உள்ளது.
இப்போதைக்கு ஒரு விதியில் மட்டும் மாற்றமில்லை. அதாவது கொரோனா பரிசோதனையில் தங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், அந்த விதியும் அடுத்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுமா என ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டபோது, சுவிட்சர்லாந்தில் நோயெதிர்ப்பு சக்தி மிக அதிகமாக உள்ளதாக தெரிவித்த சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis, என்றாலும் கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளும் ஒரு நிலையில் நாம் இருக்கிறோம் என்றும், அது போகப்போவதில்லை என்றும் கூறினார்.
ஆனாலும், அரசு கொரோனா சூழலை தொடர்ந்து உற்றுக் கவனித்து வருவதாகவும், தேவையானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.