பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட கொரோனா சுயபரிசோதனை கிட்கள்: சிறு தவறால் பெருங்குழப்பம்
பிரான்சில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுயபரிசோதனை கொரோனா கிட்களில் ஒரு சிறு தவறால் பெருங்குழப்பம் நேரிட்டது. பிரான்ஸ் கல்வித்துறை பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக சுய பரிசோதனை கொரோனா கிட்களை அனுப்பிவருகிறது.
ஆனால், அவற்றைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டதில், பெரும்பாலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா இருப்பதாக சோதனை முடிவுகள் வந்தன.
பின்னர், அதற்கு காரணம், பரிசோதனை கிட்களுடன் அனுப்பப்பட்ட விளக்கக் கையேடுகளிலுள்ள ஒரு தவறு என தெரியவந்துள்ளது. அதாவது, சுய பரிசோதனை கிட்களில், ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டதில் ஒரு தவறு நிகழ்ந்துள்ளது.
அதன்படி, அந்த கிட்டை பயன்படுத்தி பரிசோதனை செய்யும்போது, அதில் ஒரு கோடு தோன்றினால் பரிசோதனை செய்துகொண்டவருக்கு கொரோனா உள்ளது என்றும் கொடுக்கப்பட்டது.
அடுத்த வரியில், இரண்டு கோடுகள் தோன்றினாலும் பரிசோதனை செய்துகொண்டவருக்கு கொரோனா உள்ளது என்று பொருள் என அந்த கையேட்டில் கூறப்பட்டுள்ளது. ஆக, இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறால் உருவான பிரச்சினை என கருதப்படுகிறது.
அதன் அடிப்படையில் பார்த்தால், கொரோனா பரிசோதனை செய்துகொண்ட மாணவ மாணவியரில் பாதி பேருக்கு கொரோனா என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
எனவே, பிரச்சினை என்ன என்பது கண்டறியப்படதைத் தொடர்ந்து, தற்போது, சரி செய்யப்பட்ட கையேடுகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் இன்னொரு பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது அனுப்பப்பட்டுள்ள சில கையேடுகளில் கொடுக்கப்பட்ட விளக்கக் குறிப்பில் பிரெஞ்சு மொழியே இல்லை!