கனடாவில் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக பிரபல நடிகையும் கணவரும் செய்துள்ள மோசடி அம்பலம்
கனடாவில், கொரோனா தடுப்பூசியை முன்கூட்டியே பெறுவதற்காக மோசடி ஒன்றில் ஈடுபட்ட ஒரு கோடீஸ்வர தம்பதி மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
வான்கூவரில் வாழும் கோடீஸ்வரர்களான Rodney Baker (55) மற்றும் அவரது மனைவியான Ekaterina (32) ஆகிய இருவரும், தனியாக விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பூர்வக்குடியினர் வாழும் Yukon என்ற இடத்துக்கு சென்றுள்ளார்கள்.
அங்கு, தங்களை ஹொட்டல் பணியாளர்கள் போல் காட்டிக்கொண்ட இருவரும், கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
மிகத்தொலைவில் வாழ்வதாலும், முதியோர் அதிகம் வாழும் சமூகத்தினரைக் கொண்டதாலும், அங்கு வாழ்பவர்களால் எளிதில் மருத்துவ சேவையை பெற இயலாது என்பதாலும், அந்த பூர்வக்குடியினருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு, அங்கு சென்று மோசடி செய்து தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் Rodneyம் Ekaterinaவும்.
அவர்கள் மீது Yukonஇன் அவசர நடவடிக்கைகள் சட்டத்தின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 1,000 டொலர்கள் வரை அபராதமும் கூடுதல் கட்டணமும் செலுத்தவேண்டியிருக்கும்.
இந்த தகவல் வெளியானதும்,பிரபல நிறுவனங்களில் பெரும் பொறுப்பிலிருந்த Rodney, தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். Ekaterina, பிரபல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.