இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்க மறுத்த நாடுகள்... கட்டுப்பாடு விதித்த பிரித்தானியா
இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் முடிவில் இருந்து விலகியுள்ள நாடுகளின் வரிசையில், தற்போது பிரித்தானியாவும் இணைந்துள்ளது.
எதிர்ப்பை மறைமுகமாக
காஸா மீது 11 மாதங்களாக நீடிக்கும் கண்மூடித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளின் ஆயுதங்களையே இஸ்ரேல் நம்பியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,700 கடந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் தங்கள் எதிர்ப்பை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. அதில் திங்களன்று பிரித்தானியா வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் 30 எண்ணிக்கையை ரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
இரண்டு மாத காலம் முன்னெடுத்த ஆய்வின் முடிவில் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த முடிவு இஸ்ரேல் தரப்பிலும் பிரித்தானியாவிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட இத்தாலி, புதிதாக இஸ்ரேலுக்கு எந்த ஆயுத ஒப்பந்தமும் முன்னெடுக்கப்படாது. ஆனால் அக்டோபர் 7ம் திகதிக்கு முன்னர் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் என குறிப்பிட்டது.
இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக இத்தாலி உள்ளது. ஸ்பெயின் நாடும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என ஜனவரி மாதம் அறிவித்தது.
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி
ஆனால் மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் செல்லும் கப்பல்களும் தங்கள் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடியாது என அறிவித்தது.
மார்ச் மாதத்தில் இருந்து கனடாவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை பெல்ஜியம் அரசாங்கம் விதித்துள்ளது.
அத்துடன் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி வருகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பதில்லை என நெதர்லாந்து முடிவெடுத்துள்ளது.
ஆனால் உதிரி பாகங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்து வருகிறது. அங்கிருந்து இஸ்ரேலுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |