ஈரானுடன் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்ட நாடுகள் மீது நடவடிக்கை: அமெரிக்கா அச்சுறுத்தல்
US threatens severe sanctions: ஈரானுடன் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்ட நாடுகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா.
ஈரானுடன் பொருளாதார உறவுகளைப் பேணிவரும் எந்தவொரு நாடு அல்லது அமைப்பு மீதும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுவரை இராணுவ நடவடிக்கைகளால் சாதிக்க முடியாததை, பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் சாதிக்க முடியும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
இருப்பினும், தனது நட்பு நாட்டுடனான தொடர்புகளைத் துண்டிக்குமாறு அமெரிக்கா கொடுக்கும் பொருளாதார அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவை எதிர்கொள்வதில், ட்ரம்ப் நிர்வாகம் எந்த அளவிற்குத் தயாராக உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா தலைமையிலான தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்கும் எந்தவொரு நாட்டிற்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு ஈரான் ஏற்றுமதி செய்த எண்ணெயில் சுமார் 80 சதவீதத்தை வாங்கிய சீனாவிற்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், அமெரிக்காவின் தடைகளுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை இன்று நாங்கள் தெளிவாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.
ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் எந்த நாடும் குறிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்பவர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளதாகவும், மீறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள காலக்கெடு வழங்கப்படும் அல்லது அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பெசென்ட் கூறினார்.
விதிக்கப்படும் காலக்கெடு நாடுகளின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானுடனான தொடர்புகளை நிறுத்திக்கொள்ளுமாறு குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உலகத் தலைவர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக பெசென்ட் கூறினார்.

ஆனால், சீனாவிடம் கோரிக்கை வைத்தாரா என்பது குறித்து பெசென்ட் விளக்கமளிக்க மறுத்துள்ளார். இதனிடையே, வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரான் விவகாரத்தைப் பொறுத்தவரை, தடைகளும் அழுத்தங்களும் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவாது. சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசியல் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கவும் சீனா அழைப்பு விடுக்கிறது என தெரிவித்துள்ளது.
ஈரானின் உயர் தலைவர் அலி கமேனியின் மரணத்திற்குக் காரணமான தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஈரான் மீதான இரண்டாம் நிலைத் தடைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |