உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்... பன்னாட்டு விமான நிலையங்களை மூடிய நாடு
உருமாறியுள்ள வீரியம் மிக்க கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வார காலத்திற்கு பன்னாட்டு விமான சேவை நிலையங்களை இஸ்ரேல் அரசு மூட உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தபடி, விமான நிலையங்கள் மூடப்படும் இந்த தடை உத்தரவானது உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை வரை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டுப் பயணிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க முடியும் எனவும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை காக்க இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதாபிமான அடிப்படையிலும், தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிறப்பு அனுமதி பெற்றூக்கொள்ளலாம் என உளவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உருமாற்றம் கண்ட புதிய கொரோனா தொற்று முதலில் பிரித்தானியாவிலும் பின்னர் தென்னாப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டது.
தற்போது இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் புதியவகை உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இஸ்ரேலில் அமுலில் உள்ளது. மட்டுமின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் மிகப்பெரிய திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 9 மில்லியன் மக்களில் இதுவரை 2.5 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி 900,000 பேர்கள் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸ் மருந்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.