திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன் சிறைக்கு கம்பி எண்ண சென்ற தம்பதி! தலைசுற்றவைக்கும் சம்பவம்
திருமணம் நடக்கும் நாளில் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் வினோத பின்னணி வெளியாகியுள்ளது.
திருமணம் என்றாலே மகிழ்ச்சியான நிகழ்வு தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்க தம்பதிக்கு அவர்களின் சொந்த திருமணம் நடக்கும் நாள் சிறைக்கு செல்லும் சோக நாளாக மாறியிருக்கிறது.
ஆடம் என்ற ஆணும், மேரி என்ற பெண்ணும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து சில வருடங்களிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு அந்த நிறுவனத்தை விட்டு விலகிய மேரி, ஆடமையும் விவாகரத்து செய்துள்ளார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆடம் பணியாற்றும் நிறுவனத்தில் தனது துறையிலேயே வேலை பார்த்து வந்த செல்சியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், இதனால் தான் ஆடமை, முதல் மனைவி மேரி விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். தங்களுடன் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளனர்.
செல்சியா, ஆடம் திருமணத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு செல்சியாவின் திருமண உடையை எங்கேயோ? பார்த்தது போல் நியாபகம் வந்துள்ளது. ஆம், அது மேரி ஆடமை திருமணம் செய்து கொள்ளும் போது போட்டிருந்த அதே உடை தான்.
உடனே மணக்கோலத்தில் இருக்கும் செல்சியாவின் புகைப்படத்தை மேரிக்கு அனுப்பிய அந்த ஊழியர் ஒருவர் இந்த உடையை எங்கேயோ பார்த்தது போல் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்து கோபமடைந்த மேரி உடனடியாக பொலிசில் தனது திருமண உடை மற்றும் சில ஆபரணங்கள் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது காதலியால் திருடப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
உடனடியாக திருமணம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்த பொலிசார் செல்சியாவிடம் திருமண உடை மற்றும் நகைகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளானர்.
அதனை கழட்டி கொடுக்கும் படி காவல்துறையினர் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு சம்மதிக்காத செல்சியா மற்றும் ஆடம் இருவரும் காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த செயலால் அதிர்ச்சியுடன் திரும்பினர்.
இதனிடையில் ஜாமீன் பெற்ற செல்சியா தனது திருமண உடை மற்றும் நகைகளை பொலிசாரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், மேலும் செல்சியாவை புகைப்படம் எடுத்து முதல் மனைவிக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்த காரணமான நபரை ஆடம் திட்டி தீர்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.