இறந்த பெண்ணின் அருகில் அமர வைக்கப்பட்ட தம்பதி! விமானத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம்
இறந்த பயணியின் அருகே நான்கு மணி நேரம் விமானத்தில் பயணித்த தம்பதியினர் மோசமான அனுபவத்தை கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பெற்றுள்ளனர்.
விமானத்தில் உயிரிழந்த பெண்
மிட்செல் ரிங் மற்றும் ஜெனிஃபர் கொலின் என்ற தம்பதி தங்களது கனவு விடுமுறையை தொடங்குவதற்காக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த போது அதிர்ச்சிகரமான அனுபவத்தை பெற்றுள்ளனர்.
மெல்போர்னில் இருந்து தோஹா வழியாக இத்தாலிக்குச் சென்ற அவர்களின் விமானத்தில், ஒரு சக பயணி நடுவானில் மயங்கி உயிரிழந்துள்ளார்.
இதனால், அந்தத் தம்பதியினர் மீதமுள்ள நான்கு மணி நேர பயணத்தை அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டு சுமார் பத்து மணி நேரம் கழிந்த நிலையில், ஒரு பெண் பயணி கழிவறையில் இருந்து வெளியே வந்து ரிங் மற்றும் கொலின் அமர்ந்திருந்த வரிசைக்கு அருகில் திடீரென மயங்கி விழுந்தார்.
விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணை உயிர்ப்பிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரது உடல் எடை காரணமாக வணிக வகுப்பு பகுதிக்கு அவரை நகர்த்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், விமானப் பணியாளர்கள் இறந்த பெண்ணை ரிங்கின் பக்கத்து இருக்கையில் அமர வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் அவர் ஒத்துழைக்க தயாராக இருந்தபோதும், அருகில் மற்ற இருக்கைகள் காலியாக இருந்தும், தங்களை வேறு இடத்திற்கு மாற்ற விமான ஊழியர்கள் முன்வரவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினார்.
தரையிறங்கிய பிறகும் தொடர்ந்த அவலம்
விமானம் தரையிறங்கிய பின்னரும் மருத்துவ ஊழியர்கள் இறந்த பெண்ணின் உடலை போர்வையால் மூடி அகற்றும் போதும், ரிங் மற்றும் கொலின் ஆகியோர் அங்கேயே அமர்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு, விமான நிறுவனம் தங்களுக்கு எந்தவிதமான ஆதரவையோ அல்லது ஆலோசனையையோ வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்து கத்தார் ஏர்வேஸ், எங்கள் விமானத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த பயணியின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த சம்பவத்தால் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |