தற்கொலை செய்துகொண்ட காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்!
இந்திய மாநிலம் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு சிலை வைத்து, மாலை அணிவித்து திருமண நிகழ்வு நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
குஜராத் மாநிலம் தாபியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவரது குடும்பத்தினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் தற்கொலை முடிவை எடுத்த காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது. அவர்கள் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு தாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் மனம் வருந்தியுள்ளனர்.
சிலைகளுக்கு திருமணம்
அதனைத் தொடர்ந்து கணேஷ்-ரஞ்சனாவுக்கு சிலை வைத்த குடும்பத்தினர், அவற்றுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். உயிரிழந்த காதலர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இதனை செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னதாக, கணேஷ் தங்கள் தூரத்து உறவினர் தான் என்றும், அவர் திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ரஞ்சனாவின் தாத்தா கூறினார்.