கடும் பனிப்பொழிவு: 60 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட தம்பதியின் திக் திக் நிமிடங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பனிப்பொழிவால் மலைப்பகுதி ஒன்றில் தனியாக சிக்கிக்கொண்ட தம்பதி இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியில் குறித்த தம்பதி விடுமுறையை கழிக்க சென்ற நிலையில், டிசம்பர் 6ம் திகதி முதல் பனிப்பொழிவால் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த சிறு குடியிருப்பின் கூரை வரையில் பனியால் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி அவர்கள் சென்ற வாகனமும் பாதிக்கு மேல் பனியால் மூடப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு குறைந்துவிடும் அங்கிருந்து வெளியேறலாம் என காத்திருந்த தம்பதி, இரண்டு மாதங்கள் அங்கே சிக்கிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில், சாப்பிட ஏதுமின்றி இருவரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட, ,இறுதியில் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர்.
சியரா கவுண்டி ஷெரிப் அலுவலகத்தில் தொடர்பு கொண்ட அவர்களுக்கு கலிபோர்னியா பிரதான சாலை ரோந்துப்படையின் ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், வாகனம் செல்லும் பாதையில் மரம் ஒன்று பெயர்ந்து விழுந்ததுடன், பனிப்பொழிவும் ஏற்பட அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, கடுமையான காற்று மற்றும் பனிப்பொழிவால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஹெலிகொப்டரும் தடுமாறியுள்ளதாகவே கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த தம்பதி்யும் அவர்களின் நாயும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
புவி வெப்பமடைதலின் தாக்கத்தாலும், குறைவான மழைப்பொழிவு மற்றும் வரலாறு காணத வெப்ப அலைகளாலும் பல ஆண்டுகளாக அதி தீவிர வானிலை மாற்றத்தை கலிஃபோர்னியா எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.