சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த தம்பதியர், தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல் ஒன்றில் அசௌகரியமான ஒரு விடயத்தை எதிர்கொண்டார்கள்.
குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்
சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணியான ஒரு பெண்ணும் அவரது கணவரும், உதய்ப்பூரிலுள்ள The Leela Palace என்னும் ஹொட்டலில் தங்கியுள்ளார்கள்.

Credit : Hotel website
அந்த ஹொட்டலில், நாளொன்றிற்கு 55,000 ரூபாய் வாடகையில் அறை ஒன்றை எடுத்து அவர்கள் தங்கியுள்ளார்கள்.
இருவருமாக குளியலறையில் இருக்கும்போது, ஹொட்டல் ஊழியர் ஒருவர், மாற்று சாவி ஒன்றைப் பயன்படுத்தி அவர்களுடைய அறைக்குள் நுழைந்துள்ளார்.
உள்ளே வரவேண்டாம் என தம்பதியர் சத்தமிட்ட நிலையிலும், அந்த ஊழியர் அறைக்குள் வந்ததுடன், குளியலறையிலிருந்த துவாரம் வழியாக எட்டிப் பார்த்ததாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தனியுரிமை மீறப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்குள்ளான அந்த தம்பதியர், நுகர்வோர் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றுள்ளார்கள்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், அந்த ஹொட்டலின் உரிமையாளர்களான Schloss Udaipur Private Limited என்னும் நிறுவனம், அந்த தம்பதியருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஹொட்டல் அறை கட்டணத்தை 9 சதவிகித வட்டியுடன் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும், வழக்கு செலவுக்காக 10,000 ரூபாய் வழங்கவேண்டும் என்றும், மொத்த தொகையையும் இரண்டு மாதங்களுக்குள் செலுத்தவேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |