மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலாங்காடு மயானத்திலிருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத்த தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் திகதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை, அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவரது உடலை எடுத்துவந்த ஆம்புலன்ஸ் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.
பின்னர் இறுதியாக அவரது உடல் வேலாங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் கடமையை செய்துவந்த மருத்துவரையே அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அதை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து கடந்த ஆண்டு மே 2-ஆம் திகதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலங்காடு மயானத்தில் இருந்து மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த உத்தரவில் உடலை தோண்டி எடுத்து, மறு அடக்கம் செய்யும் போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
