டிரம்ப்பின் வரி சட்டவிரோதம் என தீர்ப்பளித்த நீதிமன்றம் - இந்தியா மீதான வரி ரத்தாகுமா?
டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிரம்ப்பின் வரி விதிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு உலக நாடுகள் மீது வரி விதிப்பை அமுல்படுத்தினார்.
ஏற்கனவே இந்தியாவிற்கு 25% வரி விதித்திருந்த டிரம்ப், ரஷ்யா எண்ணெய் வாங்குவதாக கூறி, சமீபத்தில் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.
இந்த வரி விதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி அமுலுக்கு வந்தது.
இதே போல் டிரம்ப் தனது பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பிற நாடுகளை அடிபணிய வைக்க, வரி விதிப்பை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார் டிரம்ப்.
சட்டவிரோதம் என தீர்ப்பு
இந்நிலையில், டிரம்ப்பின் வரி விதிப்பை எதிர்த்து, நியூயார்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வரி விதிப்பு அதிகார மீறல் எனக்கூறி வரிவிதிப்பை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தனது வரி விதிப்பை அமுல்படுத்த சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை(IEEPA) செயல்படுத்துவதில் டிரம்ப் அதிகார மீறலில் ஈடுபட்டுள்ளார் என தீர்ப்பளித்துள்ளது.
டிரம்ப் கருத்து
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், "வரி விதிப்புகள் இன்னும் அமுலில் உள்ளது. வரிவிதிப்பு நீக்கப்பட வேண்டுமென மேல்முறையீடு நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இறுதியில் நாம் தான் வெல்வோம் என்று அவர்களுக்கு தெரியும். இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது அமெரிக்காவிற்கு பேரழிவாக அமையும். நிதிரீதியாக நம்மை பலவீனப்படுத்தும்.
பிற நாடுகளின் நியாயமற்ற வரி விதிப்புகளை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது அது நட்பு நாடுகளாக இருந்தாலும் சரி, எதிரிநாடுகளாக இருந்தாலும் சரி" என தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான வரி?
இந்த தீர்ப்பால், இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப்பின் வரி விதிப்பு அதிகார விதிமீறல் என தெரிவித்துள்ள நீதிமன்றம், வரி விதிப்பை ரத்து செய்ய மறுத்ததோடு, அக்டோபர் 14 ஆம் திகதி வரை அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்துள்ளது.
இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரிவிதிப்பு தொடர்கிறது.
ஜூலை மாதத்திற்குள், இந்த வரிவிதிப்பு 159 பில்லியன் டொலர் வருவாயை கொண்டு வந்தது. இது, முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.
உச்சநீதிமன்றத்திலும் இந்த வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டால், அது அமெரிக்காவிற்கான நிதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |