பிரான்சில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியதும் கணிசமாக அதிகரித்துள்ள கொரோனா தொற்று
பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதுமே கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டுமே, பிரான்சில் 74,818 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பிரான்ஸ் தேசிய சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இது முந்தைய நாட்களை ஒப்பிடும்போது கணிசமான அளவிலான உயர்வு ஆகும்.
அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய வியாழக்கிழமையை விட குறைந்துள்ளது. அதேபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், கடந்த வியாழனன்று 23,175 ஆக இருந்தது, தற்போது 21,287 ஆக குறைந்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி, மருத்துவமனைகள், பொதுப்போக்குவரத்து தவிர்த்து பிற கட்டிடங்களுக்குள் மாஸ்க் அணியத்தேவையில்லை, மருத்துவமனைகள் போன்ற இடங்கள் தவிர்த்து பெரும்பாலான பிற இடங்களுக்குச் செல்ல சுகாதார பாஸ் தேவையில்லை என்பது முதலான மேலும் பல கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன.
ஆனால், மார்ச் 14ஆம் திகதி கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டபின், கொரோனா தொற்று வீதம், 2022ஆம் ஆண்டின் முந்தைய மாதங்களை ஒப்பிடும்போது, 50 முதல் 130 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என Pasteur Institute தெரிவித்துள்ளது. மேலும், தினசரி கொரோனா தொற்றுக்காளாகுவோரின் எண்ணிக்கையும் மார்ச் மாதத்தில் 100,000ஐ தாண்டலாம் என்றும் அது தெரிவிக்கிறது.
அத்துடன், தொற்றுநோயியல் நிபுணரான Benjamin Davido கூறும்போது, அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது, மீண்டும் தொற்று அதிகரிக்க வழிவகை செய்யலாம் என்று கூறியுள்ளார்.