ஜேர்மனியில் இன்று அறிவிக்கப்பட இருக்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்
ஜேர்மனியில் Omicron அலையை எதிர்க்கும் வகையில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்வதற்காக இன்று பெடரல் மற்றும் மாகாண அரசு பிரதிநிதிகள் கூடி விவாதிக்க உள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த கூட்டம் எப்போது? யார் யார் பங்கேற்க உள்ளார்கள்?
அந்தக் கூட்டத்தில் ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான Olaf Scholz மற்றும், ஜேர்மனியின் 16 மாகாணங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
கூட்டத்தின் இலக்கு என்ன?
தேசிய அளவில் விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பின்னர், அதை விட கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையானால், அவற்றை மாகாணங்கள் முடிவு செய்யும்.
என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது?
சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbachம், பல மாகாண அலுவலர்களும், தனிமைப்படுத்தல் காலகட்டத்தைக் குறைப்பது தொடர்பாக பேசி வருகிறார்கள். அறிவியலாளர்களும் இதே கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் காலகட்டம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சரின் விருப்பம் என்ன?
சமீப நாட்களாக சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, மக்கள் கூடுகைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிகள் கடுமையாக்கப்படவேண்டும் என்றும், அனைவருக்கும் தடுப்பூசி தேவை என்றும் பேசியுள்ளார்.
அதன்படி ஓரிடத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அத்துடன், மார்ச் 15 முதல், செவிலியர்கள் முதலான மருத்துவத்துறை பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை அல்லது தடுப்பூசி பெற இயலாது என்றால் அதற்கான மருத்துவ சான்றிதழை தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது.
இந்தக் கட்டுப்பாடு அனைத்து மக்களுக்கும் விதிக்கப்படவேண்டும் என Lauterbach விரும்புகிறார். ஆனால், அப்படி ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டுமானால், அது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும்.
புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்?
கூட்டம் முடிந்தபின், இன்று மதியத்திற்கு மேல் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.