இன்று முதல் அமுல்! அமெரிக்கா செல்ல இனி இது தேவையில்லை...
அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய இன்று முதல் கோவிட்-19 பரிசோதனை தேவையில்லை.
அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்கா வரும் பயணிகள் இன்று முதல் நாட்டிற்குள் நுழைவதற்கு முன் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அடுத்த மூன்று மாதங்களில் இந்த முடிவை மறு மதிப்பீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோவிட்-19 தொற்று காரணமாக, ஜனவரி 2021 முதல், சர்வதேச விமானப் பயணிகள் புறப்படுவதற்கு முன் எதிர்மறையான சோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்தது.
பின்னர், டிசம்பரில் விதிகளைக் கடுமையாக்கி, மூன்று நாட்களுக்குப் பதிலாக அமெரிக்காவிற்கு வருவதற்கு ஒரு நாளுக்குள் பயணிகள் எதிர்மறையான சோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்று CDC கூறியது. இந்தத் தேவை அமெரிக்காவில் கடைசியாக கோவிட் பயணத் தேவைகளில் ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில், இப்போது கோடைகால பயண சீசன் தொடங்கும் சூழலில் அந்த விதிகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
பல அமெரிக்கர்கள் அரசாங்கத்தின் இந்த விதியால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கவேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்ற கவலைகள் காரணமாக சர்வதேச அளவில் பயணம் செய்யாமலே இருந்ததாக விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானியா, மெக்சிகோ, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் பயணிகள் வருகையின் போது எந்த கோவிட்-19 சோதனைகளையும் எடுக்க வேண்டாம் என்று அனுமதிக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், அமெரிக்காவில் இரண்டு புதிய ஓமிக்ரான் துணை-வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன, இது கோவிட்-19 பாதிப்புகளின் எழுச்சியைத் தூண்டுமா என்று சுகாதார நிபுணர்களின் கவலையை அதிகரிக்கிறது.