Omicron-ஐ சாதாரண காய்ச்சலாக நினைக்க வேண்டாம்: WHO எச்சரிக்கை!
Omicron வைரசை சாதாரண குளிர்கால காய்ச்சலாக (Flu) தீர்மானிக்கவேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸின் Omicron மாறுபாடு பாதிக்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது இரண்டு வார காலப்பகுதியில் இரட்டிப்பு மடங்கு பாதிப்பாகும் என்று WHO-ன் ஐரோப்பா இயக்குநர் Hans Kluge ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த விகிதத்தில், அடுத்த 6-8 வாரங்களில் ஐரோப்பாவில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் Omicron வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையமான Health Metrics and Evaluation நிறுவனம் கணித்துள்ளது என்று Kluge குறிப்பிடுகிறார்.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 53 நாடுகளில் 50 நாடுகள் Omicron வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளன என்று அவர் கூறினார்.
Omicron வைரஸ் நுரையீரலை விட மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது என்பதற்கான சான்றுகள் வெளிவருகின்றன, இது முந்தைய மாறுபாடுகளை விட லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இதை நிரூபிக்க இன்னும் பல ஆய்வுகள் தேவை என்று WHO எச்சரித்துள்ளது.
திங்களன்று, ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez), Covid-19ஐ Pandemic என்பதற்கு பதிலாக Endemic ஆக கருதவேண்டும் - அதாவது, மரணங்கள் குறைந்து வருவதால் கொரோனாவை, சாதாரண காய்ச்சலைப் (Flu) போல கருதி அதற்கு ஏற்ற ஒரு முறையைப் பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
அதாவது ஒவ்வொரு பாதிப்பையும் பதிவு செய்யாமல் மற்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தும் அனைவரையும் சோதிக்காமல், வைரஸை ஒரு தொற்றுநோய்க்கு பதிலாக ஒரு உள்ளூர் நோயாகக் கருதுவதை இது குறிக்கிறது.
இந்நிலையில், Omicron வகை கொரோனா வைரசை சாதாரண குளிர்கால காய்ச்சலாக அவரசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என WHO-ன் ஐரோப்பா இயக்குநர் Hans Kluge எச்சரிக்கை விடுத்துள்ளார்.