Omicron கடைசி அல்ல... கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறும்: உலக சுகாதார அமைப்பு வெளிப்படை
கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான Omicron கடைசி அல்ல எனவும், மீண்டும் உருமாறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான Omicron அதி தீவிரமாக வியாபித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த பல நாட்களாக உச்சம் கண்டுள்ளது.
இதனால் ஊரடங்கு, தனிமனித இடைவெளி, மாஸ்க் பயன்பாடு என மீண்டும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது பெரும்பாலான நாடுகள். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் Tedros Adhanom தெரிவிக்கையில்,
கொரோனா பெருந்தொற்றானது இன்னும் சில காலம் நீடிக்கும், புதிய மாறுபாடும் உருவாகும். ஆனால் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2022 உடன் அதை நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.
செல்வசெழிப்பான நாடுகள், தங்கள் மக்களுக்காக கொள்முதல் செய்து சேமித்து வைத்துள்ள அல்லது பதிவு செய்துள்ள தடுப்பூசிகளை எஞ்சிய ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் மனநிலைக்கு வர வேண்டும் என்றார்.
தடுப்பூசியால் மட்டுமே கொரோனா பெருந்தொற்றை ஒழிக்க முடியும் என்பதுடன், ஒட்டுமொத்த மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால், தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவையும் இருக்காது என்றார்.
ஓமிக்ரான் மாறுபாட்டை பொறுத்தமட்டில், இதற்கு முன் கண்டறியப்பட்ட மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக லேசானதாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாட்டால் பிரித்தானியாவில் மட்டும் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை 50 முதல் 70% அதிகரித்தது.
தற்போதைய சூழலில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசியால் ஓமிக்ரான் பரவல் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி சமத்துவமின்மை காரணமாகவே, தற்போது ஓமிக்ரான் பரவல் தீவிர கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே நிலை இன்னும் நீடிக்கும் எனில், இன்னொரு மாறுபாடு உருவாவதை நம்மால் தடுக்க முடியாது என்றார். தடுப்பூசி சமத்துவமின்மையை போக்கினால் நம்மால் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது ஆண்டில் இருக்கும் நாம், ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டலாம் என அவர் தெரிவித்துள்ளார்.