ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி... பைசர் நிர்வாகி வெளியிட்ட முக்கிய தகவல்
பைசர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் ஓராண்டு காலம் பாதுகாப்பாக இருக்கலாம் என அதன் முதன்மை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஆனால் பைசர் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று தொடர்பான பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேற, உலக நாடுகள் தடுப்பூசி திட்டங்களை முழுவீச்சில் அமுல்படுத்தி வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் குறிப்பிட்ட சதவீத மக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,
தற்போது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரும்பாலான நாடுகள் மக்களை அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், பைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவிக்கையில்,
பூஸ்டர் தடுப்பூசியின் காலாவதி ஓராண்டுகள் மட்டுமே எனவும், ஆனால் அது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தற்போதைய சூழலை ஆய்வு செய்கையில், ஆண்டு தோறும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதங்களில், தடுப்பூசியின் செயல் திறன் குறையத்தொடங்குவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பூஸ்டர் தடுப்பூசி முழுமையாக அளிக்கப்பட்ட பின்னரே, அது தொடர்பான ஆய்வுகளில் தெளிவான முடிவு கிடைக்கும் என்றார்.
மட்டுமின்றி, இரண்டு டோஸ் தடுப்பூசியால் கிடைத்ததை விட, அதிக அளவு பாதுகாப்பு பூஸ்டர் தடுப்பூசியால் கிடைக்கும் எனவும் ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.