திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய இந்திய கம்யூனிஸ்ட் - பின்னணியில் விஜய்யின் டெல்லி சந்திப்பு?
திமுக கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறியுள்ள நிலையில், விஜய்யின் நேற்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய CPI
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆட்சியமைக்க முடியாமல் இருந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்கிரஸ் வெளியேறி தவெக கூட்டணியில் இணைந்தது.
அதைத்தொடர்ந்து, விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்த நிலையில், தவெக ஆட்சியமைத்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
குடியரசு தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம், திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என இந்த கட்சிகள் தெரிவித்தன.
அதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கத்தில், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
கம்யூனிஸ்ட்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், "இப்போது இருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இடம் பெற இயலாது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது.

கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட ஆலோசனையை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது. கூட்டணி ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்டு இல்லை.தவெகவுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு கொடுக்கிறோம்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடும். எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும் என்பது அப்போதைய சூழல் பொறுத்து முடிவு செய்யப்படும்.
திமுக, அதிமுக, தவெக மக்கள் ஜனநாயக சக்திகள்தான். பாஜக, ஆர்.எஸ்.எஸ் தவிர்த்து தமிழகத்தில் மற்ற அனைவரும் நட்பு சக்திகள்தான்" என பேசியுள்ளார்.
விஜய் - டி.ராஜா சந்திப்பு
3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், நேற்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

இன்று திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள நிலையில், விஜய்யின் நேற்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |