பல்லாயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசலா? மோடி அரசை குற்றம் சாட்டும் காங்கிரஸ்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பாலத்தில் விரிசல்?
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ தூரத்தில் அடல் சேது பாலம் என்ற கடல் பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலமானது இந்தியாவின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும், இது மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது.
கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கிய பாலத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் முடிந்தது. ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்ட அடல் சேது பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்நிலையில் அடல் சேது பாலம் திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சில புகைப்படங்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சேது பாலத்தின் முக்கிய பகுதியில் விரிசல் ஏதும் இல்லை என்று மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "அடல் சேது பாலத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விரிசல்கள் கட்டுமான குறைபாடுகளால் ஏற்பட்டதல்ல. இவற்றால் பாதிப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |