மாலத்தீவுக்குப் புறப்பட்ட வீரர்கள்: பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த கிரிக்கெட் அவுஸ்திரேலியா
கொரோனா சூழல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ரத்தான நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள் தற்போது சொந்த நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.
இதனிடையே அவுஸ்திரேலிய அரசு இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை விதித்துள்ளதால், தற்போதைய நிலையில் அந்நாட்டு வீரா்கள் மாலத்தீவுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு சில நாள்கள் தங்கியிருந்து பிறகு அவா்கள் அவுஸ்திரேலியா புறப்படுகின்றனா். ஐபிஎல் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடர், சில நாள்களுக்கு முன்பு கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார்.
ஸ்லேடர் வழியைப் பின்பற்றி ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 40 பேரும் டெல்லியில் கூடி, அங்கிருந்து அவா்கள் தனி விமானத்தில் மாலத்தீவுகள் சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் இணைந்து பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளது.