உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர் கூலி வேலை செய்யும் பரிதாபம்!
2018 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்று பெற்ற நிலையில் அந்த அணியில் இடம்பிடித்திருந்த வீரர் தற்போது கூலி வேலை செய்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
2018ல் நடந்த பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பார்த்திருக்கிறீர்களா? குறைந்தபட்சம் அது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அந்த உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி தான். அந்த தொடரில் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா.
இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக பல முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நவ்சாரி பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்தும், சில நேரங்களில் கட்டிட வேலைக்குச் சென்றும் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
அடுத்த உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுக்கவும் வழி இல்லாமல், யோசிக்கவும் நேரம் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இவருக்கு அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நரேஷ் தும்டா கூறுகையில், நான் 2018-ம் ஆண்டு நடந்த பார்வை மாற்றுத்திறனாளி உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தேன்.
ஆனால், தற்போது கொரோனா வைரஸால் வறுமைக்குத் தள்ளப்பட்டு, தினம் ரூ.250க்கு கூலி வேலைக்குச் செல்கிறேன். சில நேரங்களில் காய்கறி விற்பனை செய்கிறேன். என்னுடைய குடும்பத்தைக் கவனிக்க எனக்கு அரசாங்கத்தில் ஏதாவது ஒருவேலை தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.