மதுபோதையில் வாகனம் ஓட்டிய வார்னருக்கு அபராதம் - சிக்கலில் கேப்டன் பதவி
david warner fined for drunk and drive: மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் டேவிட் வார்னருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
வார்னருக்கு அபராதம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார்.

இந்த தொடரின் இடையே கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், சிட்னி புறநகரில் உள்ள மரோவ்பிரா பகுதியில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியுள்ளார்.
அங்கு காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் நடத்திய சுவாசப் பரிசோதனையின் போது, வார்னர் சட்ட வரம்பை விட 2 மடங்குக்கும் அதிகமான மது அளவுடன் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.
கடந்த மாதம், சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை வார்னர் ஒப்புக்கொண்டார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வார்னர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 1,066 அவுஸ்திரேலிய டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,01,912) அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், டேவிட் வார்னர் இனி இன்டர்லாக் கருவியை பொருத்திய பின்னரே வாகனம் ஓட்ட வேண்டும். இந்த இன்டர்லாக் கருவியானது ஓட்டுநரின் உடலில் மதுவின் அளவை கண்டறிந்தால், கார் இயங்குவதைத் தடுத்துவிடும்.

வார்னர் அணித்தலைவராக உள்ள சிட்னி தண்டர் அணியை NSW கிரிக்கெட் நிர்வகிக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் NSW கிரிக்கெட் ஒரு மாநிலப் பங்காளராக உள்ளது.
இந்த தண்டனைக்கு பின்னர் வார்னரின் கேப்டன் பதவி கூட பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |