கடந்த 16 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரியுமா?
ஐபிஎல் 17 -வது சீசன் தொடங்கவிருக்கும் நிலையில் கடந்த 16 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்க்கலாம்.
கடந்த 2008 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL போட்டியானது தற்போது வரை 16 சீசன்களை கடந்து 17 -வது சீசன் தொடங்கவுள்ளது.
இதில் முதல் சீசனில் விளையாடிய பெரும்பாலானோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் பல வீரர்கள் இன்னும் உள்ளனர். அவர்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.
மகேந்திர சிங் தோனி (MS Dhoni)
IPL முதல் சீசனில் இருந்து மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
கடந்த 2016 மற்றும் 2017 -ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டபோது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக 2 சீசன்களில் விளையாடியுள்ளனர்.
விராட் கோலி (Virat Kohli)
ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து விராட் கோலி உள்ளார். இவர் ஐபிஎல் 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து வருகிறார்.
237 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 130.02 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 37.25 சராசரியில் 7263 ரன்கள் எடுத்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik)
ஐபிஎல் 2008 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். பின்பு, பஞ்சாப், டெல்லி, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளுக்காக 16 சீசன்களில் விளையாடியுள்ளார். இவர், 242 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4516 ரன்கள் எடுத்துள்ளார்.
ஷிகர் தவான் (Shikhar Dhawan)
ஐபிஎல் 2008 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்தார். பின்பு, டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் இவர் 217 போட்டிகளில், 127.16 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 35.19 சராசரியுடன் 6616 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோஹித் சர்மா (Rohit Sharma)
ஐபிஎல் 2008 இல் ரோஹித் சர்மா அறிமுகமானார். அப்போது அவர் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தார். அதன்பின்னர், 2011 -ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.
இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. அதேநேரம், ரோஹித் சர்மா 243 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 130.05 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 29.58 சராசரியுடன் 6211 ரன்கள் எடுத்துள்ளார்