சீனா மீது கடும் விமர்சனம்... உலகப் புகழ்பெற்ற தொழில் அதிபர் திடீர் மாயம்: இறுகும் மர்மம்
சீனா அரசாங்கம் மற்றும் அதன் சமீபத்திய அணுகுமுறை தொடர்பில் கடுமையாக விமர்சனம் முன்வைத்த உலகில் பரவலாக அறியப்பட்ட தொழில் அதிபர் ஜாக் மா திடீரென்று மாயமாகியுள்ளார்.
அலிபாபா நிறுவனரும் தலைவருமான 56 வயது ஜாக் மா ஒரு காலகட்டத்தில் சீனா அரசாங்கத்தின் நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார். இந்த நிலையில் ஆப்பிரிக்க தொழில்முனைவோருக்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு வந்த ஜாக் மா திடீரென்று அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைய பக்கத்தில் இருந்தும் ஜாக் மாவின் புகைப்படம் உள்ளிட்ட காணொளிகள் நீக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான ஜாக் மா சமீபத்தில் சீன அரசாங்கம் மற்றும் வங்கிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் சீன நிர்வாகம் திடீரென அவரது நிறுவனம் மீது ஏகபோக எதிர்ப்பு விசாரணையை அறிவித்தது.
சீனாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஜாக் மா ஐக்கிய நாடுகள் மன்றத்துடனும், உலகின் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருபவர்.
கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய காலகட்டத்தில் ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் சார்பில் உலகமெங்கும் நன்கொடையாக மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இதுவரை ஜாக் மா ஆபத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை என்றே பன்னாட்டு பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால், தமது கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் விமர்சனம் செய்பவர்களை சீனா விட்டுவைப்பதில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் சீனாவின் இன்னொரு தொழிலதிபர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கோமாளி என விமர்சிக்க, திடீரென்று அவர் ஊழல் மற்றும் முறைகேட்டில் கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சுமார் 35 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுக்கு அதிபரான ஜாக் மா கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மாயமாகியுள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.