காணாமல் போன 4 வயது சிறுவன்..சடலமாக சுமந்து வந்து கரை சேர்த்த முதலை..அதிர்ந்த மக்கள்
இந்தோனேசியாவில் காணாமல் போன சிறுவனை, முதலை ஒன்று கொண்டு வந்து சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டு நாட்களாக தவித்த குடும்பம்
கிழக்கு காலிமண்டான் மாகாணத்தில் உள்ள ஜாவா முகத்துவாரம் அருகே முகமது ஜியாத் விஜயா என்ற 4 வயது சிறுவன் காணாமல் போனதாக கூறப்பட்டது.
சிறுவன் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆனதால் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருந்தனர். அப்போது முதலை ஒன்று முகமது ஜியாத்தின் உடலை சுமந்துகொண்டு வந்து கரையில் சேர்த்தது.
@Newsflash
சுமந்து வந்த முதலை
குறித்த முதலை சுமார் ஒரு மைல் தூரம் சிறுவனின் உடலை தனது தலைக்கு மேல் சுமந்து வந்ததாக தெரிய வந்தது. அவனது உடலை அது இறக்கிவிட்டு மீண்டும் தண்ணீரில் பின் வாங்கியது. இது காண்போருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது.
அதன் பின்னர் சிறுவனின் உடலை பரிசோதித்தபோது, உடலில் கடிபட்ட தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கிழக்கு காலிமண்டான் பசர்னாஸ் தேடல் மற்றும் நிவாரண அலுவலகத்தின் தலைவர் மெல்கியான்ஸ் கோட்டா தெரிவித்தார்.
முதலை உண்மையில் உதவியதாக நினைத்த குழு
மேலும் அவர், 'காலை ஏழு மணியளவில் ஒரு முதலை மனித உடலை சுமந்து செல்வதைக் கண்டதாக குடும்பத்தினரிடம் இருந்து குழுவுக்கு தகவல் கிடைத்தது.
நாங்கள் தேடிய குழந்தை தான் அந்த உடல் என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவரை தேடுவதில் முதலை உண்மையில் உதவியதாக நாங்கள் நினைத்தோம். எதுவும் காணவில்லை. அனைத்தும் அப்படியே உள்ளது' என தெரிவித்தார்.
சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக ஆற்றில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என குழுவினர் நம்பினர்.
முதலை சிறுவன் ஒருவனின் உடலை சுமந்து வந்து கரை சேர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.