சூறாவளியின் போது மத்திய தரைக்கடலைக் கடக்க முயற்சி: வெளிவரும் நடுங்கவைக்கும் தகவல்
கடந்த வாரம் ஹரி சூறாவளி தெற்கு இத்தாலி மற்றும் மால்டாவைத் தாக்கிய நிலையில், மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
380 பேர்கள் வரையில்
இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், 380 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது.

மேலும், மால்டா அதிகாரிகளால் ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 50 பேர் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த படகு விபத்தில் மால்டாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தெரிய வந்துள்ளது.
படகு விபத்தை அடுத்து அந்த நபர் 24 மணி நேரம் கடலில் தத்தளித்ததாகவும், ஒரு வணிகக் கப்பலால் மீட்கப்படுவதற்கு முன்பு படகின் இடிபாடுகளில் ஒட்டிக்கொண்டு உயிருக்கு போராடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜனவரி 20 ஆம் திகதி துனிசியாவிலிருந்து புறப்பட்ட அந்தப் படகில் இருந்த மற்ற அனைவரும் இறந்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.
இதனிடையே, கடந்த வாரம் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில், கினியாவைச் சேர்ந்த ஒரு வயது இரட்டைக் குழந்தைகள், சிசிலியன் தீவான லம்பேடுசாவின் கடற்பகுதியில், ஹரி சூறாவளியால் அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆபத்தான சூழ்நிலை
மத்தியதரைக் கடலில் பெரும் சீற்றத்தை உருவாக்கிய சூறாவளியின் போது துனிசியாவிலிருந்து பயணம் செய்த 380 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று இத்தாலியின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
துனிசிய துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸிலிருந்து கடந்த 10 நாட்களில் ஆபத்தான சூழ்நிலையையும் மீறி ஆட்கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட எட்டு படகுகளை கடலோர காவல்படை தேடி வருகிறது.

இந்த நிலையில், இத்தாலியின் உள்விவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் இத்தாலிய கடற்கரையோரங்களில் 66,296 பேர் படகு மூலம் கரையேறியதாக தெரிய வந்துள்ளது.
இத்தாலியின் தீவிர வலதுசாரி அரசாங்கம், லிபியா மற்றும் துனிசியாவுடன் இந்தப் பாய்ச்சலைத் தடுக்க ஒப்பந்தங்களை வலுப்படுத்தியது அல்லது இயற்றியயுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |