Cryptocurrency வர்த்தகம் கூடாது... மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டில் விதிக்கப்பட்ட தடை
Cryptocurrency வர்த்தகம் விலக்கப்பட்ட ஒன்று எனவும், இஸ்லாமியர்கள் அந்த வர்த்தகத்தில் ஈடுபடுவது ஷரியா சட்டத்தை மீறுவதாகும் எனவும் இந்தோனேசிய உலமா சபை அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் உயர்மட்ட மத அதிகார சபையானது நாட்டில் உள்ள சுமார் 230 மில்லியன் இஸ்லாமியர்களை ஷரியா சட்டத்திற்கு விரோதமான நாணயங்கள் தொடர்பான வர்த்தகத்தை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இது தொடர்பான தடையை இந்தோனேசிய உலமா சபை அறிவித்துள்ளது. மட்டுமின்றி Cryptocurrency வர்த்தகம் என்பது ஒருவகை சூதாட்டம் எனவும் உலமா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் உலமா சபையின் ஆணைகள் இந்தோனேசிய சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
சுமார் 230 மில்லியன் இஸ்லாமியர்கள் வசிக்கும் இந்தோனேசியாவில், கடந்த ஓராண்டாக Cryptocurrency வர்த்தகம் அதிகரித்து வந்துள்ளது. Cryptocurrency வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்தோனேசிய மக்களின் எண்ணிக்கை 4 மில்லியனில் இருந்து 2020 மற்றும் 2021ல் 6.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த மே மாதம் வரையான Cryptocurrency வர்த்தகமானது 25.96 பில்லியன் டொலர் என அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்தோனேசிய அரசாங்கம் ஏற்கனவே கிரிப்டோவை நாணயமாக பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.