ஆண்டுக்கு ரூ.58 கோடி தர முன்வந்த ஐபிஎல் அணி - நாட்டுக்காக மறுப்பு தெரிவித்த கம்மின்ஸ், ஹெட்
ஆண்டுக்கு ரூ.58 கோடி ஊதிய வாய்ப்பை பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் நிராகரித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா அணித்தலைவராக உள்ள பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
ஆண்டுக்கு ரூ.58 கோடி ஊதியம்
இந்நிலையில், ஐபிஎல் நிறுவனம் ஒன்று அவர்களை அணுகி அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இருந்து விலகி, மற்ற லீக் தொடர்களில் தங்கள் அணி சார்பாக விளையாட ஆண்டுக்கு 10 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.58 கோடி) வழங்குவதாக தொடர்பு கொண்டுள்ளது.
ஆனால், இரு வீரர்களும் அவுஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவோம் எனக்கூறி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.
2024 ஐபிஎல் ஏலத்தில், பேட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
அந்த அணியின் அணித்தலைவராக உள்ள அவர், 2024 ஐபிஎல் தொடரில் SRH அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.
மேலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஆண்டுக்கு ரூ.17.48 கோடி ஊதியம் பெற்று வருகிறார்.
இதே போல், டிராவிஸ் ஹெட்டை 2024 ஐபிஎல் ஏலத்தில் ரூ.6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. அதன் பின்னர், ரூ.14 கோடிக்கு அவரை தக்க வைத்தது.
மேலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து ஆண்டுக்கு ரூ. 8.74 கோடி ஊதியம் பெற்று வருகிறார்.
SRH அணி, ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது, SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்ற அணியையும் நிர்வகித்து வருகிறார். அந்த அணியில் இரு வீரர்களையும் விளையாட வைக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |