வெளிநாட்டில் சொகுசு ஹொட்டல் ஒன்றில் சயனைடு தாக்குதல்: சடலமாக மீட்கப்பட்ட ஆசிய நாட்டவர்கள்
தாய்லாந்தில் சொகுசு ஹொட்டல் ஒன்றில் சயனைடு விஷம் உட்கொண்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சயனைடு தாக்குதலில் மரணம்
தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ள Grand Hyatt Erawan நட்சத்திர ஹொட்டலிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் ஹொட்டலின் ஒரு அறையில் இருந்து 5 சடலங்களும், வாசல் அருகே ஒரு சடலமும் என 6 பேர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள் என்றும், அதில் இருவர் வியட்நாம் - அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றே உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெலியானது. ஆனால் தாய்லாந்து பொலிசார் வெளியிட்ட உத்தியோகப்பூர்வ தகவலில், 6 பேர்களும் சயனைடு தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவே குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, சம்பவம் நடந்த ஹொட்டல் அறையில் மோதல் நடந்ததாகவும் அடையாளங்கள் இல்லை, 6 பேர்களும் ஒன்றாக மரணமடைந்துள்ளதாகவே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஹொட்டல் தரப்பில் தெரிவிக்கையில், அந்த 6 பேர்களும் ஹொட்டலில் இருந்து வெளியேற முடிவு செய்து, தங்கள் சூட்கேஸ்களுடன் தயார் நிலையில் இருந்ததாகவும், ஆனால் குறித்த நேரத்தில் அவர்கள் அறை சாவிகளை ஒப்படைக்க தாமதமானதால், ஹொட்டல் ஊழியர் ஒருவர் விசாரிக்க சென்றுள்ளார்.
உண்மையான காரணம்
இந்த நிலையிலேயே அந்த கோர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் 6 பேர்களும் சுமார் 5.30 மணிக்கு இறந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், தொடர்புடைய பயணிகளின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைக்கு தாய்லாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
6 பேர்களும் வாயில் நுரை வழிய சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் மரணம் நாட்டின் சுற்றுலாத் துறையை பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறி, விரிவான மற்றும் கவனத்துடனான விசாரணையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தம் 350 அறைகள் கொண்ட Grand Hyatt Erawan நட்சத்திர ஹொட்டலானது நாட்டின் மிகப் பிரபலமான சுற்றுலா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் பெருமளவு தங்கியிருக்கும் பகுதி அது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |