தீவிர புயலாக வலுப்பெற்ற "டானா".., கரையை கடப்பது எப்போது?
வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை மையம் கூறுகையில்..,
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் "டானா'' புயலாக மாறியது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றிரவு 11.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
இந்த புயல் ஒடிசாவிற்கு தென் கிழக்கே 330 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்று நள்ளிரவு தொடங்கி நாளை காலை வரை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, "டானா" புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தங்களது படகுகளை கயிறு கட்டி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
"டானா’" புயல் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை 190 ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
இதேபோன்று புவனேஷ்வர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் இன்று மாலை முதல் நாளை காலை வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |