தேன்கூட்டில் ட்ரக்கை மோதிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பிரேசில் நாட்டில், தேன்கூட்டின்மீது ட்ரக்கை மோதிய பெண்ணொருவர் தேனீக்கள் கொட்டியதால் பரிதாபமாக பலியானார்.
தேன்கூட்டில் ட்ரக்கை மோதிய பெண்
பிரேசில் நாட்டில் Vacaria என்னுமிடத்தில் ட்ரக் ஒன்றை செலுத்திவந்த ஃபாத்திமா (Silvana da Fatima Braganca da Luz, 54) என்னும் பெண், தன் வீட்டின் அருகே வரும்போது அவரது ட்ரக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த ட்ரக், சாலையோரமாக இருந்த ஓரிடத்தில் சென்று மோதியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு பெரிய தேன்கூடு இருக்க, தேனீக்கள் ஃபாத்திமாவை சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளன.
அவர் சத்தமிடுவதைக் கவனித்த பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஃபாத்திமாவின் பெற்றோரை அழைக்க, அவர்கள் மகளைக் காப்பாற்ற ஓடியுள்ளார்கள்.
ஃபாத்திமாவின் தந்தையான ரால் (Raul Portela da Luz, 79), கவிழ்ந்து கிடந்த ட்ரக்குக்குள் சிக்கியிருந்த தனது மகளைக் காப்பாற்ற முயல, அவரையும் அவரது மனைவியையும் தேனீக்கள் கொட்டியுள்ளன.
விடயம் என்னவென்றால், அவர்கள் வாழ்ந்துவந்தது ஒரு கிராமப்பகுதி. தீயணைப்பு வீரர்கள் 40 மைல் தூரத்திலிருந்து வரவேண்டியிருந்ததால் அவர்களால் சரியான நேரத்துக்கு சம்பவ இடத்துக்கு வர இயலவில்லை.
தேனீக்களால் கொட்டப்பட்ட மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, ஃபாத்திமா அன்றே உயிரிழந்திருக்கிறார்.
ஃபாத்திமாவின் தந்தையும் அடுத்த நாள் உயிரிழக்க, அவரது தாய் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.
தேனீக்களால் தாக்கப்பட்டு ஒரு தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |