வெளிநாட்டில் மருமகன்! அவர் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்க தயாரான மாமனார்... அப்போது மகளை கதறி அழ வைத்த ஒரு சம்பவம்
தமிழகத்தில் பொங்கல் சீர்வரிசை கொடுக்க சென்ற போது விபத்தில் சிக்கி சமையல் மாஸ்டர் உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (47). சமையல் மாஸ்டரான இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
மகளை கடலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். சமீபத்தில் தந்தை வீட்டுக்கு மகள் ரேணுகா வந்திருந்தார். ரேணுகாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சம்பந்தி வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொடுப்பதற்காக வெங்கடேசன் மகன் விக்னேஷ்வரன், மகள் ரேணுகாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
மூவரும் ஒரே வண்டியில் பயணித்து போக்குவரத்து விதியை மீறிய சூழலில் அவர்களின் வண்டி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியது.
இந்த விபத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது மகன், மகள் என 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தந்தை இறந்ததையடுத்து ரேணுகா, விக்னேஷ்வரன் மருத்துவமனையில் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.