மகளை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று கண்டம் துண்டமாக வெட்டி புதைத்த தந்தை! கதறி அழுத உறவினர்கள்
இந்தியாவில் மகள் காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி, தந்தை அவரை தனியாக அழைத்துச் சென்று, வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் பகுதியை சேர்ந்த பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை செய்து வரும் நிலையில், சைலஜா என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
சைலஜா பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தான், இவரும் பெங்களூருவில் வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தனசேகர் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
மகளின் காதலை விரும்பாத சைலஜாவின் தந்தை பாபு திருமணம் தொடர்பாக பேசலாம் என்று மகள் செல்போனில் இருந்து தனசேகரை கடந்த சனிக்கிழமை அழைத்துள்ளார். பேசுவதற்காக சென்ற தனசேகரை சைலஜாவின் தந்தை தன்னுடைய தோட்டத்திற்கு அழைத்து சென்று துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்து அங்கேயே புதைத்துள்ளார்.
மகனை காணாமல் தேடிய தனசேகரின் பெற்றோர் பலமனேர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் கடந்த நான்கு நாட்களாக தேடி வந்த நிலையில், அவருக்கு இறுதியாக வந்த செல்போன் அழைப்பு அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் பாபுவின் தோட்டத்தில் இருந்து தனசேகர் உடலை இன்று தோண்டி எடுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவு ஆக இருக்கும் சைலஜாவின் தந்தை பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.