தஹாவூர் ராணா முதல் F-35 போர் விமானங்கள் வரை.., மோடி - ட்ரம்ப் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசினார்.
மோடி - ட்ரம்ப் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) அதிகாலை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இருவரும் தஹாவூர் ராணா முதல் F-35 போர் விமானங்கள் வரை பல விடயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, பிரதமர் மோடி தாயகம் திரும்பிவிட்டார்.
தஹாவூர் ராணா நாடு கடத்தல்
கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது வாஷிங்டனில் இருந்த பிரதமர் மோடி, டிரம்ப்பின் முடிவுகளை பாராட்டினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், "2008-ம் ஆண்டு இந்தியாவில் இனப்படுகொலை செய்த குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததற்காக டிரம்ப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இந்தியாவுக்கு F-35 போர் விமானங்கள்
இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை (F-35 fighter jets) வழங்குவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் உயரடுக்கு கிளப்பில் இந்தியா இணையும். அவை F-35 போர் விமானங்களை வாங்க அனுமதிக்கப்படும்.
மேலும் டிரம்ப் கூறுகையில் “இந்த ஆண்டு முதல் நாங்கள் இந்தியாவிற்கான இராணுவ விற்பனையை பல பில்லியன் டொலர்கள் அதிகரிக்கவுள்ளோம். எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கவும் வழி வகுத்து வருகிறோம்” என்றார்.
500 பில்லியன் டொலர் வர்த்தகம்
இந்த சந்திப்பில், 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக 500 பில்லியன் டொலராக உயர்த்த இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இலக்கை நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும் அவர், இரு நாடுகளும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
MIGA & MAGA
மோடி பேசுகையில், "அமெரிக்காவை மீண்டும் பெரிதாக்குவோம் (MAGA) (Make India Great Again) என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேபோல, நாங்கள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கில் (Make America Great Again) செயல்படுகிறோம். அதாவது அவரது மொழியில், (MIGA) ‘மேக் இந்தியா கிரேட் அகெய்ன்’ என்று அர்த்தம். இவரது பேச்சு அங்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் மோதலை தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் அவர் "ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் நான் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்துள்ளேன். இந்தியா நடுநிலை வகிக்கிறது என்ற தவறான எண்ணத்தில் பலர் உள்ளனர்.
ஆனால் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், நாங்கள் ஒரு பக்கம் இருக்கிறோம், அதுதான் அமைதி" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |