புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துதல் தொடர்பில் மெர்ஸ் அளித்த பதில்
உலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கருத்துக்கள் வலுவடைந்துவருவதை தெளிவாகக் காணமுடிகிறது.
சமீபத்தில், சட்டப்படி புலம்பெயர்ந்தவர்களையும் நாடுகடத்தவேண்டும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
விடயம் என்னவென்றால், ஒரு காலத்தில் அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியிலும் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.
உங்கள் மகள்களைக் கேளுங்கள்...
ஜேர்மனியின் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதை வைத்தே அரசியல் செய்துவருகிறது.
அக்கட்சிக்கு ஜேர்மன் மக்களிடையே ஆதரவும் பெருகிவருகிறது. ஆனால், ஆளும் CDU/CSU கூட்டணியைச் சேர்ந்த சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸும் இப்போது AfD கட்சியினரைப்போல பேசத்துவங்கியுள்ளார்.
சமீபத்தில், புலம்பெயர்தல் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மெர்ஸ், பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை ஜேர்மனியிலிருந்து நாடுகடத்துவதற்கு ஆதரவாக கருத்தொன்றை தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், நேற்று அந்த விடயம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் மெர்ஸிடம் கேள்வி எழுப்பினார்.
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது தொடர்பில் நீங்கள் கூறிய கருத்தை சரிசெய்ய விரும்புகிறீர்களா அல்லது அதற்காக மன்னிப்புக் கோர விரும்புகிறீர்களா எனக் கேட்டார் அந்த ஊடகவியலாளர்.
அதற்கு பதிலளித்த மெர்ஸ், உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா, மகள்களும் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.
REUTERS/Fabrizio Bensch
உங்கள் மகள்களிடம் இதே கேள்வியைக் கேளுங்கள், அவர்கள் சத்தமாக, தெளிவாக இந்தக் கேள்விக்கு பதிலளிப்பார்கள் என நான் கருதுகிறேன்.
எனது கருத்தில் மாற்றமில்லை, நான் சொன்னதைத் திரும்பப் பெறப்போவதும் இல்லை, அதையே அழுத்தம் திருத்தமாகக் கூற விரும்புகிறேன், நாம் சில விடயங்களை மாற்றியே ஆகவேண்டும் என்றார் மெர்ஸ்.
மெர்ஸின் இந்தக் கருத்துக்கும் எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், அவர் வலதுசாரிக் கட்சிகளின் கருத்தையே எதிரொலிப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.